பேராசிரியர் மெளன குருவின் பாரதிதாசன் ஆய்வு
Friday, January 26, 2
மௌனகுரு அவர்கள். அவரது நூலொன்று தமிழகத்தில் வெளிவருவது
இதுவே முதல் முறை எனக் கருதுகிறேன்.
மௌனகுரு பல பரிமாணங்கள் உடையவர். முதன்மையாக அவர் ஒரு
கலைஞர். ஈழத்து அரங்கத்துறையில் முக்கியப் பங்களிப்பு செய்த
நான்கைந்து பேர்களில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். அரங்க
நடவடிக்கைகளிலும் அவர் பல துறைகளில் தடம் பதித்தவர். அரங்க
ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு
மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் பெயர் பெற்றவர். புகழ்
பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய நாடகங்களில் அவரது
கூத்துச் சிறப்பை மற்றவர் கூற வாசிக்கையில் நாம் பார்க்க இயலாது
போன வருத்தம் ஏற்படுவது இயல்பு. இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில்
ஊறிப்போன சாதியத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக
நிகழ்வுகளென “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் டானியல்
அவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்விரு நாடகங்களிலும் மௌனகுரு
அவர்களின் பங்கு முக்கியமானது.
மௌனகுரு நாடக ஆசிரியர், அரங்கத் துறை அறிஞர் மட்டுமன்று அவர்
ஒரு கவிஞர், சிறுகதை எழுத்தாளருமாவார்.
அவரது இன்னொரு முக்கியப் பரிமாணம் கல்வித் துறை சார்ந்தது.
இலங்கையில் முக்கியத் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும்
அவர் பணியாற்றிய பங்களிப்புகள் செய்தாரென்ப தோடு கிழக்குப்
பல்கலைக் கழக உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவருக்குப் பிரதான
பங்குண்டு.
பேராசிரியரின் அடுத்த பரிமாணம் தமிழ் ஆய்வு சார்ந்தது. தமிழ் இலக்கிய
வரலாறு, சங்க காலம் தவிர விபுலானந்தரின் கருத்துலகம் முதலான
துறைகளில் அவரது பங்களிப்பு உண்டு. நீலவாணன், சுபத்திரன் முதலான
ஈழக் கவிஞர்களைத் தொடர்ந்து இந்நூலில் அவர் பாரதிதாசனை
ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.
மௌனகுரு மட்டக்களப்பைச் சார்ந்தவர். ‘மட்டக்களப்புத் தமிழகம்’ எனக்
குறிப்பிடும் அளவிற்கு அங்குள்ள பண்பாடு பிற ஈழத் தமிழ்ப்
பண்பாடுகளில் வேறுபட்டது. தனித்துவமான கூறுகளைக் கொண்டது.
கூத்து மரபிலும் மட்டக்களப்பு மரபு தனித்துவமானது. இக்கூத்துக்
கலைக்குரிய முக்கியத்துவத்தையும் கல்வித்துறையில் வலியுறுத்தி
உரிய இடத்தைப் பெற்றுத் தந்தவர்களில் பேரா. அ. வித்தியானந்தன்
அவர்களுக்கும் மௌனகுரு அவர்களுக்கும் பெரும் பங்குண்டு. கூத்துக்
கலையை நவீன முறையில் ஆய்வு செய்து அதன் செவ்வியல் கூறுகளை
நிறுவியவர். கூத்துக்களைத் தவிர மட்டக்களப்புக் குரிய இசை,
வழிபாடுகள், வணக்கமுறை குறித்த பேராசிரியரின் பங்களிப்புகளும்
குறிப்பிடத்தக்கவை.
ஆக ஓர் அரங்க ஆய்வாளர் / கலைஞர், கல்வியாளர், எழுத்தாளர்,
(கவிதை, கதை) வரலாற்று / இலக்கிய ஆய்வாளர் என்கிற வரிசையில்
பேராசிரியர் மௌனகுரு அவர்களின் பரிமாணங்களை நாம்
வரிசைப்படுத்த முடியும். ‘பாரதிதாசனின் தேசியக்கருத்து நிலையும்
ஈழத்துக் கவிஞர்களில் அதன் செல்வாக்கும்’ என்கிற இந்நூல் மூன்று
கட்டுரைகளை உள்ளடக்கியது. சென்னைப் பல்கலைக் கழக இலக்கியத்
துறை சார்பாக நடத்தப்பட்ட (2004) அறக்கட்டளைச் சொற்பொழிவுகளே
இம்மூன்றும்.
1960கள் வரை ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்திய அரசியலின் செல்வாக்கு
மிகுந்திருந்தது. இங்கிருந்த அதாவது தமிழ்நாட்டில் இருந்த அரசியல்
கட்சிகளின் பிரதிபலிப்புகளே அங்குள்ள தமிழர் அரசியலில் நிலையைச்
சுட்டிக்காட்ட முடியும். இங்குள்ள பிரச்சினைகளுக்காக அங்கே
போராட்டங்கள் நடத்திய வேடிக்கை அல்லது அபத்தங்களும் உண்டு.
1948ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காலத்தில் இங்கு இந்தி
திணிக்கப்பட்டபோது அதற்கு எதிராக ஈழத்திலும் ஆர்ப் பாட்டங்கள்
நடத்தப்பட்டன. ஜூலை 31, 1948ல் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட
இந்தி திணிப்பிற்கு எதிராகக் கொழும்பில் ஒரு போராட்டக் குழு
உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 22ல் கொழும்புவில் ஒரு
இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது.
இங்குள்ள கட்சிகளின் பெயர்களிலேயே அங்குக் கட்சிகளும்
உருவாக்கப்பட்டன. 1932ல் பெரியார் இலங்கை சென்றிருந்தார்.
தேசாபிமானம், பாஷாபிமானம், குலாபிமானம், மதாபிமானம் ஆகிய
நான்கு பற்றுகளையும் விட்டொழித்தலே விடுதலைக்கான முதல்
நிபந்தனை என்கிற அவரது புகழ் பெற்ற பேச்சு அங்குதான் பொழியப்
பெற்றது. இதை ஒட்டி இலங்கைச் ‘சுயமரியாதை இயக்கம்’
உருவாக்கப்பட்டது. இங்கே சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும்
கலந்தபோது ஈழத்திலும் ‘இலங்கை சுயமரியாதை இயக்கம்’ ‘இலங்கை
நீதிக்கட்சியாக’ப் பெயர் மாற்றம் பெற்றது (ஜூலை 14, 1945) தமிழகம்
போலவே பின்னர் அங்கே நீதிக்கட்சி, ‘இலங்கை திராவிடர் கழக’மாக
மாறியது. 1949ல் திமுக உருவானபோது இலங்கைத் திராவிடர் கழகம்,
‘இலங்கை திராவிட முன்னேற்ற கழகமாக’ (இ.தி.மு.க.) பரிணாமம்
பெற்றது.
தமிழ்நாட்டு திராவிட இயக்கத் தலைவர்களான டார்டோ ஜனார்த்தனம்,
நாவலர் நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் முதலியோர் அங்கு
அடிக்கடி சென்று வீர உரைகள் ஆற்றுவதுண்டு. இளஞ்செழியன், மாறன்
முதலிய பெயர்களில் அங்கு தலைவர்கள் உருவானதும் ‘அறிவுமணி’
என இதழ் வெளியிடப்பட்டதும் நிகழ்ந்தன. இ.தி.மு.கவின் கொள்கை
விளக்க அறிக்கை “இலங்கையை தாயகமாக கொண்ட திராவிட மக்கள்
(தமிழ் பேசும் மக்களின்) நலன் பேணிக்காப்பதே இ.தி.மு.கவின்
குறிக்கோள்” என்ற முகப்பு வசனத்துடனேயே துவங்கியது. இந்தப்
பின்னணியில்தான் ஈழக்கவிஞர்கள் மத்தியில் பாரதிதாசன்
சொல்லாட்சியைக் காணவேண்டும்.
மௌனகுருவின் முதற் கட்டுரை தேசியம் குறித்த நவீன சிந்தனைகளை
மேலோட்டமாக அறிமுகம் செய்து பின் அதை ஒட்டித் தமிழ்த்
தேசியத்தை ‘இந்தியத் தமிழ்த் தேசியம்’, ‘திராவிட தமிழ்த் தேசியம், ‘சைவ
வேளாளத் தமிழ்த் தேசியம் என்பதாகப் பிரித்து இனம் காண்கிறது.
‘தேசியம் ஒரு கற்பிதம்’ முதலிய கருத்தாக்கங்கள் கடந்த 15
ஆண்டுகளாக தமிழ்ச் சூழலில் மிகவும் விரிவாகவும் ஆழமாகவும்
விவாதிக்கப் பட்டுள்ளன. நூலாசிரியர் இதனைக் கவனத்திற்
கொண்டிருக்கலாம். ‘காங்கிரஸ் கட்சியின் போதாமை ஜஸ்டிஸ்
கட்சியையும், ஜஸ்டிஸ்கட்சியின் போதாமை திராவிடர் கழகத்தையும்,
திராவிடர் கழகத்தில் போதாமை, திராவிட முன்னேற்ற கழகத்தையும்
தோற்றுவித்தமை வரலாறு” எனப் பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.
போதாமை என்பதைக் காட்டிலும் பல்வேறு வகைகளில் இரண்டு
தேசியம் கற்பிக்கப்பட்டதன் விளைவாக இதைக் காணவேண்டும். தமிழ்ப்
பண்பாடு, மொழி, இலக்கியங்கள் ஆகியவற்றின் வழியாகக்
கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசியம் தவிர்க்க இயலாமல்
சைவப்பின்புலத்துடனேயே விளங்கியது. பாரதிதாசனின் தமிழ்த்
தேசியமும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அவர்
கதை வசனம் எழுதிய ‘பொன்முடி’ திரைப்பட உரையாடல்களைக் கூர்ந்து
கவனித்தால் எந்த அளவு சைவ தமிழ்ப் பெருமையை வேர்பதித்து நின்றது
என்பது விளங்கும். சைவத் தமிழ் வீரனொருவன் வடநாட்டாரை வென்ற
கதையே பொன்முடி.
மௌனகுருவின் இரண்டாம் கட்டுரை பாரதிதாசனின் கருத்து நிலை
மாற்றங்களைக் காலப்பகுப்பு செய்கிறது. 1891-1908 பழமை வாதக்
கருத்துநிலை; 1908-1930 இந்திய தேசியக் கருத்து நிலை; 1930-1945
திராவிட தேசியக் கருத்து நிலை; 1945-1960 தமிழ்த் தேசியக் கருத்துநிலை
என்றதாக இப்பாகுப்பாடு அமைகிறது. பாரதிதாசன் கவிதைகளைத்
துணிந்து ஆய்வதே இம்முடிவை மௌனகுரு வந்தடைகிறார். இயற்றிய
நாடகம் பாரதிதாசனிடம் வெளிப்படும் சாதி மத எதிர்ப்பு, தொழிலாளர்
ஆதரவு, பெண் விடுதலைக் கருத்துக்கள் ஆகியவற்றையும்
சுட்டிக்காட்டுகிறார்.
நூலில் இறுதிக்கட்டுரை ஈழத்து நவீனக் கவிதை மரபில் பாரதிதாசனின்
கருத்து நிலை ஏற்படுத்திய தாக்கத்தை ஆய்வு செய்கிறது. 1950,
1960களில் வாழ்ந்த ஈழ கவிஞர்கள் எல்லோரிடமும், பாரதிதாசனின்
தாக்கம் இருந்ததைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர் குறிப்பாக
ஈழக்கவிதையை அந்தக் கட்டத்திற்கு நகர்த்திய கவிஞர்களான மகாகவி,
முருகையன், நீலவாணன் ஆகியோரிடமும் பாரதிதாசன் கருத்துநிலை
வகித்த செயல்பாட்டை மேற்கோள் ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.
வாழும் கவிஞர்களில் காசி ஆனந்தன், புதுவை இரத்தினத்துரை ஆகிய
ஈழத்து தேசியக் கவிஞர்களில் பாரதிதாசன் செல்வாக்கைச்
சுட்டிக்காட்டுவதோடு பசுபதி, சுபத்திரன் முதலான பொதுவுடைமைக்
கவிஞர்களில் பாரதிதாசன் கருத்துநிலையின் தாக்கத்தையும்
சொல்கிறார். பாரதிதாசன் தாக்கம் பெற்ற இன்றைய கவிஞர்களாக
வேலழகன், சிகண்டிதாசா, வாகரைவாணன் ஆகியோரைக்
குறிப்பிடுகிறார்.
ஈழத்துத் தமிழ் கவிஞர்களில் படைப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய
அளவில் தமிழகத்தில் விரும்பிப் படிக்கப் பட்டுள்ளதை அறியலாம். நவீன
தமிழ்க் கவிதைகளிலும் இன்றைய ஈழக் கவிஞர்களின் செல்வாக்கு
காணப்படுவதும் கண்கூடு. இன்றைய போர்ச்சூழலால் அழிந்து
கொண்டிருக்கும் தமிழ் மக்களின் துயரை இக்கவிஞர்கள்
புலம்பெயர்ந்தும், பெயராமலும் பதிவு செய்துள்ளனர். அவர்களின் நீண்ட
பட்டியல் ஒன்றை நாம் இங்கே சொல்லமுடியும். இன்றைய தமிழ்க்
கவிதைகளை, ஈழத்து தமிழ்க் கவிதைகளைப் படிப்பவர்களாக
அவர்களையே நாம் சொல்ல முடியும். முக்கிய சில பெண் கவிஞர்களும்
இதில் அடக்கும். ஆனால், இவர்களின் பெயர்கள் எதுவும் பாரதிதாசன்
கருத்தியலால் தாக்கம் பெற்ற கவிஞர்களின் பட்டியலில் இடம்
பெயராதது குறிப்பிடத்தக்கது.
தமிழ்க் கவிதை இன்று மிகப் பெரிய வளர்ச்சியையும் தள
மாற்றங்களையும் கண்டுள்ளது. புதிய கவி மொழி இங்கு
உருவாகியுள்ளது. கருத்துக்களையும், கொள்கைகளையும்
உரத்துப்பேசும் வானம்பாடி மரபும் இன்று இற்று வீழ்ந்து விட்டது. எதுகை,
மோனைகளுக்குப் பதிலாக வந்த படோபடமான படிமங்களின் காலமும்
இன்று மலையேறி விட்டது. உலகைப் புரட்டிடும் நெம்புகோல் கவிதை
எழுதியவர்கள் எல்லாம் இன்று ‘ஹைகூ’ போன்ற வடிவங்களில் தஞ்சம்
புகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாரதி, பாரதிதாசன் முதலானோர் ஒரு
குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அரசியலின் கருத்து நிலையின்
வெளிப்பாடு. இன்று அந்த காலங்கள் கடந்து விட்டன. பாரதியிடம்
விளங்கிய ஒரு பன்முகத்தன்மை (variety) யும் கூட பாரதிதாசனில்
காண்பது அரிது. தேசிய முரண் வலுவாக வெளிப்படும் நிலை இங்கைக்
காட்டிலும் ஈழத்தில் இன்று அதிகமாகவே இருந்தபோதிலும் இயக்கம்
சார்ந்த கவிஞர்களாக காசி ஆனந்தன், பூவை. இரத்தினதுரை
போன்றவர்கள் மட்டுமே இன்றும் பாரதிதாசனால் ஊட்டம் பெற
முடிகிறது என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.
பல்கலைக் கழக ஆய்வுரை என்கிற வகையில் விரிவாக மேற்கோள்
ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருந்தால் நூல் இன்னும் சிறப்பாக
அமைந்திருக்கும். பேராசிரியர் மௌனகுரு அவர்களின் நாடக
ஆக்கங்களும், கலை, பண்பாடு, தொடர்பான நூல்களும் தமிழ்நாட்டில்
பதிப்பிக்கப்படுவது அவசியம்.
பாரதிதாசன் தேசியக் கருத்துநிலையும் ஈழத்து கவிஞர்களின்
செல்வாக்கும்
நன்றி: உங்கள் நூலகம் (கீற்று வழியே)
ஆசிரியர்: பேரா. மௌனகுரு, வெளியீடு : என்.சி.பி.எச்., சென்னை - 98, விலை : ரூ. 40.00.
Comments
Post a Comment