தமிழ் 'இன்னிய' அணி

பேண்ட்' குழுவுக்கு மாற்றீடாக

தமிழ் 'இன்னிய' அணி

(வீரகேசரி 05-06-2005, 12-06-2005 வார இதழ்களில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது)

நேர்கண்டவர்: செ.ஸ்ரீகோவிந்தசாமி




கிழக்கில் அருகிவரும் தமிழ் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு புத்துயிர் அளித்து வருபவர்களில் பேராசிரியர் சி. மௌனகுரு ஒரு முன்னோடியாக விளங்கி வருகின்றார் என்றால் மிகையாகாது. அந்த அடிப்படையில் வரவேற்பு வைபவங்களில் இங்கு வழக்கமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களின் 'பேண்ட்' வாத்தியக் குழுவுக்கு மாற்றீடாக தமிழ் கலாசார பாரம்பரிய ரீதியில் வாத்தியக் குழுவொன்றை பேராசிரியர் சி.மௌனகுரு அமைத்துள்ளார்.


தமிழ் 'இன்னிய அணி' என இது அழைக்கப்படுகிறது.


அண்மையில் நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது இடம்பெற்ற இந்த வாத்தியக் குழுவின் இன்னிøயும், ஆட்டமும் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்தத் தமிழ் பாரம்பரிய இன்னிய அணிக்குழு (Group of Tamil Band) உருவானது பற்றி பேராசிரியரிடம் 'கேசரி' சார்பாகக் கேட்டபோது அவர் அளித்த பதில்கள் வருமாறு:


கேள்வி: இத்தகையதொரு வாத்தியக் குழுவை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு எவ்வாறு தோன்றியது?




பதில்: வாத்தியக் குழு என்று நீங்கள் கூறுவதை நாங்கள் 'இன்னியம்' என்று அழைக்கிறோம். இன்னியம் என்றால் பல இசைக் கருவிகளைக் கூட்டாக இசைத்தல் என்பது அர்த்தம். 'கூடுகொள் இன்னியம் கறங்க' எனப் புறநானூறு கூறும்.

காலனித்துவ சிந்தனைக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கும் நாம் மேற்கு நாட்டவரின் பழக்க வழக்கங்களை மேலானதாகக் கருதி விடுகிறோம். அவர்களைப் போல உடை, நடை, பாவனை இவை எல்லாம் புகுந்து நமது பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் அழித்தே விட்டன. அதில் ஒன்றுதான் நாம் பயன்படுத்தும் 'பேண்ட் வாத்தியம்'. 'பேண்ட் வாத்தியம்' என்றால் 'வெள்ளையன்ர பறைதானே' என்று கவிஞர் மகாகவி, கோடை நாடகத்தில் கூறுகிறார். வெள்ளையனின் பறைக்கு மாற்றீடாக நமது பறையைப் பாவித்தால் என்ன? என்ற எண்ணமே இதற்கான ஒரு தூண்டுதல்

.
எனது 20ஆவது வயதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது கண்டி எல பெரஹராவில் ஓர் இன்னிய அணியை இரவு, நெருப்பு வெளிச்த்திற் கண்டேன்.


சிங்கள பெர (மத்தளம்), சங்கு என்பன முழங்க ஆட்டக் கோலங்களுடனும், அழகான ஆடை அணிகளுடனும் ஆண்களும் பெண்களுமாக ஆனந்தமாக அணி வகுத்து அவர்கள் சென்றமை ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது. இது நமது மண்ணிற்குரியது என்பது பிரத்தியேகமாகத் தெரிந்தது. அந்த அணி வகுப்பே தேசிய அணி வகுப்பாகக் காட்டப்பட்டமையும் சிறுபான்மை மக்களின் அடையாளங்கள் அதில் இல்லாமையும் அன்றே வேதனை தந்தன

.
இத்தகையதொரு பாரம்பரிய இன்னிய அணியை, இசையும், ஆடலும் கொண்டதாக ஈழத் தமிழ் மக்களுக்கு உருவாக்க முடியாதா? என்ற ஏக்கம் எழுந்தது. அது கனிந்து வர 40 ஆண்டுகள் சென்றன. கிழக்குப் பல்கலைக்கழகத்தில்தான் அது சாத்தியமாயிற்று

.

கேள்வி: இந்த இசைக் குழுவை, இன்னிய அணியை அமைக்கக் காரணம் என்ன?



பதில்: எமது நுண்கலைத்துறை வருடந்தோறும் உலக நாடகத் தினவிழா நடத்துவது வழமை. அதற்கு விருந்தினரை மேளதாளங்களோடு அழைப்பது மரபு. கிழக்கு மாகாணத்தில் மேளம்/ நாதஸ்வரம் பெரு வழக்கில் இல்லை. இங்குள்ளவை தமிழர் மத்தியில் மத்தளம், உடுக்கு, பறை, சங்கும், இஸ்லாமியர் மத்தியில் றபானும்தான். அத்தோடு கூத்து ஈழத் தமிழருக்குப் பொதுவான ஓர் ஆடல் மரபு. (இஸ்லாமியர் மத்தியிலும் கூத்துகள் ஆடப்பட்டமைக்குச் சான்றுகளுண்டு) இவ்வாத்தியங்களையும், ஆடல்களையும் பண்டைய உடைமுறைகளையும் வைத்து விருந்தினர்களை விழாவுக்கு அழைக்கலாம் என நினைத்தேன்

.
மண்ணோடு சார்ந்த வாத்தியம், உடை, ஆடல் என்பன தனித்துவமாக மேற்கு நாட்டவருக்கு மாறான ஓர் அடையாளம் காட்டும் என்பதும் இதை அமைக்க இன்னொரு காரணம்.


இம் முயற்சியில் தமிழர், முஸ்லிம்கள் வாழும் இடங்களிலுள்ள பாடசாலைகளும் மேற்கொண்டுள்ளன. முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு முன்னாள் யெலாளர் சுந்தரம் டிவகலாவின் பணிப்பில் இம்முயற்சியில் முன்னமேயே ஈடுபட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் முற்றாக அந்நிய கலாசாரத்திலிருந்தும் தமிழரின் உயர் கலாசாரத்தினின்றும் விடுபடவில்லை. நாம் அனைத்துத் தமிழரினதும் கலாசாரத்தை (உடுக்கு,பறை) இணைத்தோம். இதுதான் வித்தியாசம்.


இதை அமைப்பதில் எமது நுண்கலைத் துறை விரிவுரையாளர்களான பாலசுகுமாரும், ஜெயசங்கரும் பெரும் தூணாக நின்றார்கள். அன்றைய இளம் விரிவுரையாளர்கள் பக்கத் துணையானார்கள்.


கேள்வி: இந்த இன்னிய குழுவில் இடம்பெறும் இசைக் கருவிகளின் பாரம்பரிய வரலாறு என்ன?



பதில்: இந்த இன்னியக் குழுவிலே பெரும்பறை, தப்பட்டை, றபான், உடுக்கு, மத்தளம், வணிக்கை எனும் தோல் வாத்தியங்களும் சிலம்பு, சிறுதாளம், பெருதாளம் போன்ற கஞ்ச வாத்தியங்களும் சங்கு, எக்காளம் போன்ற துளை வாத்தியங்களும் இடம்பெறுகின்றன. பெரும்பறை, தப்பட்டை என்பன கிழக்கு மாகாணத்தில் கோயில்களிற் சடங்குகளுக்கும், சித்திரைப் பெருநாள் போன்ற நாட்களில் வீடு தோறும் சென்று அடிப்பதற்கும் ஒரு காலத்திற் பாவிக்கப்பட்டன. இன்றும் பாவிக்கப்படுகின்றன. பல்வேறு வகையான தாளக் கட்டுகளும் அடிமுறைகளும் இவற்றிலுண்டு.


றபான் இஸ்லாமிய மக்கள் மத்தியில் வழங்கும் ஒரு தோற் கருவி. பக்கீர் பைத் பாடல்களில் அற்புதமாக இணைந்தொலிக்கும்.


உடுக்கு வருடம்தோறும் வைகாசி தொடக்கம் புரட்டாதி வரை கிழக்கு மாகாணம் எங்கும் நடக்கும். அம்மன் கோயில் பெருவிழாச் சடங்குகளில் ஒலித்து நாடி நரம்புகளை முறுக்கேற்றும்.


சுவணிக்கை என்பது தோலும் நரம்பும் இணைந்த உறுமும் ஒலி கொண்ட ஒரு வாத்தியம். இது முன்னாளில் கோயில்களிற் பாவிக்கப்பட்டதாக அறிகிறோம்.
சிலம்பு சிறு தெய்வக் கோயில்களில் தெய்வமாடுவோர் காலிலும், கையிலும் அணிந்து ஆடுவது. அதன் ஒலி கல்கல் என ஒலித்து ஒருவிதமான உணர்வைத் தரும். மத்தளம் கிழக்குமாகாணத்தில் கூத்துக்களில் பிரதான வாத்தியம். இதன் ஓசை காற்றில் கலந்து வருகையில் அற்புதமாயிருக்கும்.


சிறுதாளம் கூத்திற்கும் வசந்தனிற்கும் கரகத்திற்கும் காவடிக்கும் பாவிக்கப்படுவது. சங்கு கோயில்களில் ஊதப்படுவது. எக்காளம் அரசர் பவனியில் முன்னொரு காலத்தில் பாவிக்கப்பட்டது. இவை யாவும் கிழக்கு மாகாண தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரபலமான வாத்தியங்கள். அவர்கள் காதுகளுக்குப் பழகிப் போன வாத்தியங்கள். சாதாரண மக்களுடனும், மண்ணுடனும் இரண்டறக் கலந்துபோன மக்கள் வாத்தியங்கள் சாதாரண தமிழரின் வாத்தியங்கள்.


கேள்வி: எத்தகைய உடைகள் ஒப்பனைகள் இந்த இன்னிய அணிக்குழுவில் பயன்படுத்தப்படுகின்றன?


பதில்: இந்த இன்னிய அணியில் தமிழரது பாரம்பரிய மண்வானை மணக்க வேண்டும் என நாம் விரும்பினோம். வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு தயாரித்த இன்னிய அணியில் வரும் சர்வாணியும், தொப்பியும் எமக்குரியதல்ல. அவை வட இந்தியச் சாயலும் ஆங்கிலச் சாயலும் பொருந்தியவை


நாம் தமிழரின் பாரம்பரிய உடையைத் தேடினோம். அந்நியக் கலாசாரம் ஏற்படுமுன் நம்மவர் என்ன உடை அணிந்திருந்தனர்? நமக்கு ஒரு பழையபடம் கிடைத்தது. அதில் ஒரு தமிழ் அதிகாரியும் (போடியாரும்) மனைவியும் இருந்தனர். 1905ஆம் ஆண்டுப் படம் அது. அந்த உடையினையும், உடுக்கும்பாங்கினையும், தலைப்பாகையினையும் சற்று நவீன முறைப்படி அமைத்தோம்.


இதனை
அமைப்பதில் எமக்கு மிகுந்த துணை புரிந்தார் ஓவியர் கமலா வாசுகி அவர்கள். ஆடைகளுக்கான நிற ஒழுங்கையும் ஆடையையும் வடிவமைத்தவர் அவர்.

அதிகாரியான போடியார் அவரது மனைவி, அவரது மகள் அணிந்திருந்த மணிகளாலான மாலைகள், கையிலே கட்டும் தாயத்து, கைகளில் கடகம், காதுகளுக்குக் கடுக்கன் என்பனதான் ஆபரணங்கள். இவற்றை நாம் கிடைத்த சின்னக் காயங்களைக் கொண்டு செய்தோம். கடையில் வாங்கினோம்.
போடியாரின் தலைப்பாகை அழகாக ஒழுங்குபடுத்தப்பட்டு புதுத் தலைப்பாகையாக மாறியது.


கேள்வி: இன்னிய அணியிற் கையாளப்படும் தாளம், ஆட்டம் பற்றிய நுட்பங்கள் யாவை?



பதில்: இந்த இன்னிய அணி 1997 இல் ஆரம்பத்தில் மரபுவழி அண்ணாவிமார் 10 பேரைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அவர்கள் அன்று மத்தளம் மாத்திரமே பாவித்தனர். 'ததித்துளாதக ததிங்கிணதிமிதக தாதெய்யத்தாதோம்' என்ற தென்மோடித் தாளக்கட்டை அடித்தபடி அவர்கள் ஊர்வலத்தின் பின்னால் வந்தனர். 1998 இல் மாணவரை மாத்திரம் கொண்டதாகவும், ஆடை அணிகளுடனும் இது வடிவமைக்கப்பட்டதுடன் 1998 இல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு பாவிக்கப்பட்டது. 1999, 2000 ஆண்டுகளில் மேலும் பல ஆட்டங்கள் புகுத்தப்பட்டன.


'தகதகதகதிகுதிகுதிகு தளாங்கு தித்தக தக ததிங்கிணதோம்' என்றதும், 'தந்தத் தகிர்தத் தகிர்தத்தாம் திந்தக் திகிர்தத் திகிர்தத் தெய்' என்ற வடமோடித் தாளக்கட்டுகளும் வீசாணம், பொடியடி, நடை போன்ற வடமோடி ஆட்டக் கோலங்களும் புகுத்தப்பட்டன. நீண்டதொரு ஊர்வலத்திற் செல்லும் இவர்கள் வடமோடி, தென்மோடிக் கூத்தர் போல கைகளை அசைத்துக் கொண்டும், நடந்து கொண்டும் ஆடிக் கொண்டும் செல்வார்கள்.

2002ஆம் ஆண்டில் இன்னும் சில ஆட்ட நுட்பங்களை இணைத்தோம். கூத்தர்போல சிலருக்கு முழங்காலிலிருந்து புறங்கால் வரை சதங்கைகளும் அணிந்தோம்.

ஒவ்வொரு வருடமும் ஒரு சிறு முன்னேற்றம்.

பின்னாளில் கொடி ஆலவட்டம் எல்லாம் இதில் இணைத்துக் கொண்டோம்.


கேள்வி: இந்த இசைக் குழுவை மேலும் அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன?



பதில்: எமது நோக்கம் தூர நோக்காகும். நாம் இன்று பயன்படுத்தும் வாத்தியங்கள் ஈழத்தமிழருள் சாதாரண மக்கள் மத்தியில் பயில் நிலையிலுள்ள வாத்தியங்களாகும். தவில் (மேளம்), நாதசுரம், வயலின், புல்லாங்குழல் என்பன சாஸ்திரிய சங்கீதத்திற்குப் பாவிக்கப்படுகின்றன.


பரதநாட்டியத்தில் அடவுகளும், ஜதிகளும் ஆடல் முறைகளும் உள்ளன. அவற்றையும் இதனுடன் இணைக்கும் பொழுதுதான் இவ்வின்னிய அணி முழுமை பெறும். அத்தோடு கிழக்கு மாகாணத்தில் வாழும் இஸ்லாமியர் மத்தியில் வழங்கும் களிகம்பு அடி அசைவுகளும் இணைக்கப்பட வேண்டும்.


பெரும்பறை, சிறுபறை, தப்பட்டை, மேளம், றபான், உடுக்கு, மத்தளம், நாதசுரம், சொர்ணாளி, புல்லாங்குழல், சிறுதாளம், பெருதாளம், மிருதங்கம், சங்கு, எக்காளம், சிலம்பு, கேண்டி, அம்மனைக்காய், வணிக்கை, கூத்து, பரதம், கழிகம்பு என இன்னிய அணியும் ஊர்வலமும் என்று அமைகிறதோ அன்று அது முழுமை பெறும்


. இவ்வின்னிய அணியைப் பார்க்கும்போது அனைவரும் இது எம்மது என்ற உணர்வு பெற்று அதனோடு ஒன்றிவிட வேண்டும் என்பதே எமது குறிக்கோள்.
இந்த அளவுக்காவது பல்கலைக்கழக மாணவரைக் கொண்டு வர நாம் மிகுந்த சிரமப்பட்டோம்.


பறை, உடுக்கு, தப்பட்டை, மத்தளம், றபான் என்பன படிப்பறிவில்லாத மக்கள், பின்தங்கிய மக்கள் பாவிக்கும் வாத்தியம் என அதனைத் தூக்கவும் பாவிக்கவும் வர மாணவர் தயங்கினர்


. காலனித்துவக் கல்வியும் மேற்கு மயமோகமும் அவர்கட்கு பேண்ட், றம்பட், எக்கோடியன், கிட்டார் போன்ற வாத்தியங்களையும், வயலின், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களையுமே உயர்ந்தவையாகக் கருதும் மனோபாங்கை ஏற்படுத்தியிருந்தன. அந்த மனத் தடையை நாம் விரிவுரைகள், கலந்துரையாடல்கள், யெல்முறைகள் மூலம் உடைத்தோம்.

எமது விரிவுரையாளர்களான பாலசுகுமார் (இன்றைய கலைப் பீடாதிபதி) ஜெயங்கர் என்போரும் நானும் பறையையும், மத்தளத்தையும் உடுக்கையும் வாசித்தோம். மாணாக்கருடன் மேடையில் ஏறினோம். வீதியில் வந்தோம்.

பேராசிரியர் உடுக்கு அடிக்கிறார் என்ற பல்கலைக்கழகக் கல்விமான்களின் பகிடியை நாங்கள் பொருட்படுத்தவில்லை.

மாணவர் தெளிவு பெற்றனர். எம் பின்னால் வந்தனர்.

காலப் போக்கில் அவர்கள் எம்மையும் முந்திச் சென்றனர்.

நாம் இப்போது அவர்களின் பின்னால்.

முதலாம் கட்டத்தைத் தாண்டி மக்கள் வாத்தியங்களை இசைக்க மாணவரைப் பயிற்றவுள்ளோம். ஏனைய வாத்தியங்களை இசைத்துக் கொண்டு வீதியில் இறங்கும் மனோபக்குவத்தையும் வரலாற்றுக் கடமையையும் விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் சாஸ்திரீய சங்கீதம் பயிலும் மாணவரை உணரப்பண்ண வேண்டும்.

இஸ்லாமிய மாணவர்க்கு இதனை உணர்த்தி றபானுடனும், கழிகம்பு ஆட்டத்துடனும் அவர்களையும் களத்தில் இறக்க வேண்டும்.

இதனிடையே பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். பல ஏளனங்களையும் எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டும். நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் நாமும், நமது விரிவுரையாளர்களும் மாணவர்களும் இதில் ஈடுபடுகிறோம்.

ஏற்பது ஏற்காது விடுவது சமூகத்தைப் பொறுத்தது.


கேள்வி: பேண்ட் வாத்தியத்தைக் கை விடும் படியான நிலைமையை தங்கள் இன்னிய அணி உருவாக்குமா?


பதில்: எனக்கென்ன தெரியும்? பல்கலைக்கழகத்தின் பாரிய பணி, ஆராய்ச்சி செய்வதும் அதனைச் சமூக நலனுக்குப் பாவிப்பதும்தான். திட்டமிட்டு பிரக்ஞைபூர்வமாக இதனை உணர்ந்தோரும், வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் வளர்த்தால் பாடசாலை மூலம் இது பரவ வாய்ப்புண்டு. பாடசாலைகளில் இரண்டு பேண்ட் இருக்க வேண்டும். ஒன்று மண் சார்ந்த பேண்ட்(Indigenous Band) , அடுத்தது வழமைபோல் மேற்கத்தைய பேண்ட் (Western Band) என்ற கட்டளையைப் பாடசாலைகட்கு அமைச்சு பிறப்பிக்க வேண்டும். செய்வீர்களா?


படித்தவர்களின் கண்களைத் திறப்பது தானே இன்று பெரும் கஷ்டமாக இருக்கிறது.



கேள்வி: இது விடயமாக தாங்கள் வாகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புபவை என்ன?



பதில்: பகிர்ந்து கொள்ள நிறைய உண்டு.


ஒன்று இதனை உருவாக்க நாங்கள் பட்ட பெரும் கஷ்டம் எதிர்ப்பு எங்களது எண்ணக் கருவை (இணிணஞிஞுணீt) யாரும் முதலில் புரிந்து கொள்ளவில்லை

. பறையையும், உடுக்கையும் மத்தளத்தையும் கூத்தாட்டத்தையும் கண்டவுடன் பலர் பதறிவிட்டனர். திடுக்குற்று விட்டனர். இதென்ன நாம் முன்னர் பார்க்காத ஒரு ஊர்வலம் என்று அவர்கள் எண்ணியிருக்க வேண்டும்.

ஏற்கனவே நான் கூறியபடி மாணவர்களுக்கு இதனைப் புரிய வைத்து உள்ளிழுப்பது பெரும்பாடாகி விட்டது. இன்றைய சினிமாவுக்குள்ளும், தொலைக்காட்சிக்குள்ளும் ஊறி அதி நவீன ஆட்டங்களை ரசிக்கும் குழாத்தை எப்படி அதி பழைய கருத்துருவுக்குக் கொண்டு வருவது. எனினும், நாம் வெற்றி பெற்றோம் எமது உழைப்பு வெற்றி தந்தது.

இளம் வயது லட்சிய வேகம் கொண்டது.

தறிகெட்டு அது ஓடினாலும் இலட்சியங்களைக் காணும் போது அவற்றை அது பற்றிப் பிடித்துவிடும்.

எமது மாணவர் லட்சியத்தைக் கண்டு கொண்டனர். பற்றிப் பிடித்துக் கொண்டனர்.

இத்தனைக்கும் மேலால் எமக்கு சில விரிவுரையாளர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது.

மூன்றாம் தர சினிமாப் பாடலை ஊதியபடி வரும் நாதசுர ஊர்வலத்தை வரவேற்கும் இவர்கள் பாரம்பரிய கூத்துத் தாளக் கட்டுக்களுடனான மத்தளத்தை வரவேற்க ஆயத்தமாயில்லை

.
பறை கிழக்கு மாகாணத்தின் மங்கள ஒலியும் கூட. ஒரே பறையில் அமங்கல ஒலியும் வாசிக்கப்படும். மங்கள ஒலியும் வரும். செத்த வீட்டுக்கு அமங்கல அடி. கோயிலுக்கு மங்கள அடி. யாழ்ப்பாணத்தின் சில கோயில்களிலும் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் கோயிலிலும் வாசிக்கப்படுவது மங்கலப் பறைதானே?

பறை ஒலி முன்னுக்கு வருவதா என்று சிலர் பதறினர். தமிழ் மரபில் பறையொலியுடன்தான் பவனிகள் நிகழ்ந்தன என்பதை அறியாத இவர்கள் தமிழ் மரபு வேறு பேசினர். தமிழரிடம் காணப்படும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தி விட்ட சிந்தனையோட்டம் அது. இன்னும் விடுதலை பெற விரும்பாத மனோபாவம் அது.

இன்னிய அணியின் ஆடை அணிகளையும் மாணவரின் வெற்றுடல்களையும் கண்ட சிலர் "எங்களை கெதியாக கோவணத்துடன் தான் பட்டமளிப்புக்கு வரச் சொல்வார்களோ? என்று கேலி பேசினர்.

இவர்களின் பெற்றோர்களும் பாட்டன்மார்களும் கோவணத்துடன்தான் பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள். அதனைப் பெருமையாகக் கருதும் தன்னம்பிக்கை அற்றவர்கள் இவர்கள். தாம் நடந்து வந்த பாதையினை மறைக்கும் கல்வியைத்தான் இவர்கள் கற்றுள்ளார்கள்.

இதனைத் தான் காலனித்துவக் கல்வி என்று முன்னர் குறிப்பிட்டேன்.


இரண்டாவது நான் பகிர்ந்து கொள்ள விரும்புவது ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவமளிக்காமை.

தமிழகத்திலிருந்து வரும் தரம் கெட்ட ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் தரும் ஊடகங்கள் இப்பாரம்பரிய மக்கள் மண் சார்ந்த ஆட்டங்கள், அணிகளுக்கு முக்கியமளிப்பதில்லை.

மூன்றாவதாக நான் பகிர விரும்புவது இவ்வின்னிய அணி பிரதே பண்பு சார்ந்தது என்றும் உடுப்பு அணி, ஆட்டம் என்பவற்றில் சிங்களச் சாயல் கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டமை.

அப்படியல்ல. இதில் கையாளப்படும் வாத்தியங்கள் வடக்கிலும் கிழக்கிலும், வட கிழக்கிலும் பயில் நிலையிலிருந்தவை ஆட்டங்களும் அவ்வாறே, உடையும் அவ்வாறே என நாம் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விளக்கவேண்டியிருந்தது.


நான்காவது பகிர விரும்புவது இவ்வின்னிய அணியை 1998 இல் நாம் பட்டமளிப்பு விழாவில் முதன்முறை செய்தபோது தமிழ் நாடு கோயம்புத்தூர் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த பேராசிரியர் ஆரோக்கியசாமி இதனைப் பார்த்து வியந்து "தமிழ் நாடு செய்யாததை உங்கள் பல்கலைக்கழகம் செய்துள்ளது என்று பாராட்டியது, ஊக்கமளித்தது.


2003 இல் சர்வதே நாடக விழா நடந்தபோது அதில் கலந்துகொண்ட மான்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும், சிங்களப் புத்திஜீவிகளும், கலைஞர்களும் இன்னிய அணியின் ஊர்வலம், ஆட்டம் என்பனவற்றை வியந்தும் செழுமையான கலாசார மரபு எனப் பாராட்டியதும், பாரதியின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

தரமான புலமையெனில் பிற நாட்டார் இதை வணக்கம் செய்ய வேண்டும். இல்லையா?


கேள்வி: பௌத்த சிங்கள கலாசாரத்தின் சாயலும் இன்னிய அணியிலும், ஆட்டத்திலும் இருப்பதாகக் கூறப்பட்டது. இதைத் தவிர்க்க முடியுமா?



பதில்: பௌத்த சிங்கள கலாசாரம் என்றால் என்ன என்று கூற முடியுமா?

மத்தளம், உடுக்கு, பறை, வணிக்கை, தாளம், சங்கு, றபான், சிலம்பு, சதங்கை என்பன பௌத்த சிங்கள கலாசாரமா?

அது தமிழர் மத்தியில் முன்னாளில் இருந்ததல்லவா?

பௌத்த மதத்தின் வருகையின் முன் இலங்கையில் வாழ்ந்த தமிழர் மத்தியிலும், சிங்களவர் மத்தியிலும் இவ்வாத்தியங்கள் இருந்தன.

பண்பாடு, பழக்க வழக்கம், உடை, ஒப்பனை, ஆடை அணிகளிலும் ஒற்றுமைகள் இருந்தன. ஒன்றிலிருந்து ஒன்று பெற்றுக் கொண்டன. அதனால், இரண்டும் செழுமை பெற்றன.

உடுக்கு சிங்களத்திற்கு 'உடுக்கி' என்ற பெயரில் சென்றது.

மத்தளம் அங்கு 'தமிழ பெர' என்றே அழைக்கப்படுகிறது.

வாசிக்கப்படுகிறது. தமிழர் மத்தியில் இருந்த சொர்ணாளி அங்கு 'ஹொரணை' என்று அழைக்கப்படுகிறது

. கூத்தாட்டத்திற்கும், கூத்து அசைவுகளுக்கும், நடைக்கும் கண்டிய நடனம், சப்பிரகமுவ மூவா நடனத்திற்குமிடையே நிறைந்த ஒற்றுமைகளுண்டு

.
சரத் சந்திரா தனது "'மனமே! சிங்கபாகு' நாடக ஆட்டமுறைகளை தமிழ்க் கூத்திலிருந்து பெற்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

எமது இன்னிய அணியின் உடை அமைப்பும் ஆடை அணிகளும் மட்டக்களப்பின் போடியார் குடும்பத்தினுடையது என்பதை முன்னமேயே விளக்கியுள்ளேன்.

ஒரு நாள் இன்னிய அணி வருகையில் ஒரு மாணவன் என்னைப் பார்த்து 'சிங்களச் சாயல் தெரிகிறதே' என்றான்.

அவனிடம் நான் 'தம்பி இங்கு வா' என்று அழைத்து 'தாளத்தைக் கவனி' என்றேன். 'ததித்துளாதக ததிங்கிண திமிதக' என்ற தென்மோடித் தாளக் கட்டுக்களை அவதானிக்கச் சொன்னேன். 'தந்தத் தகிர்தத் தகிர்த்தா' என்ற வடமோடித் தாளக் கட்டுக்களை அவதானிக்கச் சொன்னேன். 'தகதகதக திகு திகு திகு' என்ற தாளக் கட்டுக்களுடன் அவர்கள் வருவதைக் காட்டினேன்.

'இது நமது தாளக்கட்டு' என்று வியப்புடன் அவன் கூறினான்.


'மத்தளமும், உடுக்கும், வணிக்கையும், சிலம்பும், சங்கும் சிங்களச் சாயலா?'


என்றேன். 'இல்லையே' என்றான்.


'உடுப்பு உனது பாட்டனார் போட்ட உடுப்படா பையா' என்றேன்.


எம்மிடமிருந்து இன்னொரு இனத்துக்குச் சென்றதெல்லாம் எம்முடையது அல்ல என்று கூறுகிற கலாசார வறுமைதான் எம்மிடமுள்ளது.


எம்முடையது எது என்று எம்மவர்க்கே தெரியாத அவலம்.


அறிவாளிகளின் நிலையே இது. ஆனால், நிச்யமாக சாதாரண பொதுமக்களுக்கு அது சிங்களச் சாயலாகத் தெரியாது. ஏனெனில் அவர்கள் அந்தச் சூழலுக்குள் வாழ்பவர்கள். அவர்களிடமிருந்துதான் அறிவாளிகள் என்போர் கற்றுக் கொள்ள வேண்டும்.

இம்முறை பட்டமளிப்பு விழாவுக்கு இவ்வின்னிய அணியை எமது புதிய உபவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் உபயோகித்தமை அவர் மீது எமக்கு மதிப்பை உயர்த்தியதுடன், நம்பிக்கையையும் தந்தது.

ஆராய்ச்சியினால் கண்ட முடிவினை நாம் அமுல்படுத்துகிறோம். உபவேந்தர் அதன் தன்மை கண்டு ஆதரவு தருகிறார்.

நான் தற்போது விடுமுறை லீவில் நிற்கிறேன். இவ்வின்னிய அணியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவரும், எமது சகாவும் இன்றைய கலைப் பீடாதிபதியுமான பாலசுகுமார். இதனை இம்முறை முன்னின்று நடத்தினார்.

இதனை நடத்திச் செல்ல இன்னொருவர். இதன் தன்மையையும் தேவையையும் தெரிந்த அறிந்த ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)

Comments

Popular posts from this blog

தமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்..

கூத்தரங்கம்