படைப்பது மாத்திரமே எமது செயல்.படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடயதாகி விடுகிறது.

படைப்பது மாத்திரமே எமது செயல்.படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடயதாகி விடுகிறது.

 காண்டவ தகனம் (கூத்து பரதம் தழுவிய நிருத்திய நாடகம் பற்றி எனது குறிப்பும் சுவைஞர்கள் குறிப்பும்) _______________________________________________________ சி.மௌனகுரு

அரங்க ஆய்வு கூடம் தயாரித்த காண்டவ தகனம் இது வரை ஆறு மேடைகள் கண்டுவிட்டது.ஒவ்வொரு மேடையேற்றமும் எமக்கு ஒவ்வொரு அனுபவங்களே. இது நாடகம் என நாம் சொன்னாலும் சுவைஞர்கள் கூத்து என்றே அழைக்கிறார்கள். கூத்தின் அம்சங்கள் இதில் தூக்கலாக இருப்பதனால் அவ்வாறு அழைக்கிறார்களோ தெரியவில்லை. படைப்பது மாத்திரமே எமது செயல். படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடயதாகி விடுகிறது. அவர்கள் பெயர் வைப்பார்கள், விமர்சனம் செய்வார்கள் .குறை நிறை கூறுவார்கள் அது சுவைஞர் செயல். இங்கு காண்டவ தகனம் பற்றிய எனது குறிப்பும் சுவஞைர் சிலரின் குறிப்புகளும் தரப் படுகின்றன

____________________________________________ காண்டவ தகனம்" -------------------------------------- சி.மௌனகுரு

கூத்தில் நான் அண்மையில் மேற் கொண்ட புதிய முயற்சியே "காண்டவ தகனம்" இது ஒரு வகையில் பரிசோதனை முயற்சி.அரங்க ஆய்வு கூடத்தின் தொடர் ஆய்வு வேலைகளுக்கூடாக உருவான ஓர் புத்தாக்கம்.இன்னும் முழுமை பெறாத ஒரு நாடகம். மாணவர்களுடனும் பார்ப்போருடனும் கலந்துரையாடி ஒரு சமூக அரங்காக இதனை நாம் உருவாக்க நினைக்கிறோம். என்னிலும் ஐம்பது வருட இளைய தலைமுறையோடு இணைந்து பணி புரிகையில் கிடைக்கும் அனுபவங்கள் மிகப் பெறுமதியானவை. அவை என்னைப். புதிய திசைகளுக்கு இட்டுச்செல்கின்றன. கூத்தின் மரபை மீறுகிறார் என மரபுவாதிகள் சிலரும், கூத்தோடு மட்டுமே நிற்கிறார் என நவீன வாதிகள் சிலரும், கூத்தை மக்களிடமிருந்து பிரிக்கிறார் என பின் நவீன வாதிகள் சிலரும் என் மீது காட்டமான விமர்சனங்கள் வைக்கின்றனர். ஒருவகையில் என்னச் சோர்வூட்ட திட்டமிட்டுப் படாதபாடு படுகின்றனர் இவர்களுக்கு பதில் சொல்லவோ இவர்களோடு மோதவோ எனக்கு நேரம் இல்லை ஏனெனில் .செய்வதற்கு மிக அதிகமுண்டு ஞானதாஸ் ,பாய்வா,முர்சித் போன்றோரின் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எமக்கு உற்சாகம் தருகின்றன." "உருவாகி வரும் புதிய கூத்து நாடகம்". எனவும் "Social oriented Theatre work". எனவும் இதனை ஞானதாஸ் அழைத்துள்ளார். படைப்பின் வழி சென்று படைப்பாளிகளைப் புரிந்து கொள்ளும் அவருக்கு எமது மனம் நிறைந்த நன்றிகள் 28ஆவது இலக்கிய விழாவில் நடைபெற்ற காண்டவ தகனம் பற்றி முர்சித்தும்,பாய்வாவும் தங்கள் குறிப்புகளை இங்கு கூறுகின்றனர்.அனைவர்க்கும் நன்றிகள் மௌனகுரு காண்டவ தகனம் பற்றிய சுவைஞர் கருத்துக்கள் காண்டவ தகனம்!" போராசிரியர் மௌனகுரு அவர்களின் நெறியாளுகையில் உருவாகி வரும் புதிய கூத்து நாடகம்!

______________________________________________________ ஞானதாஸ்

மகாபாரதப் போரின் பின்னர், அர்ச்சுனன் பேய் அறைந்தவன் போல் ஆகிவிடுகிறான். தலை குனிந்து நிற்கின்றான். அந்தக் கொடிய போர் ஏற்படுத்திய அழிவுகள், காவு கொடுக்கப்பட்ட உயிர்கள், வெற்றி மீது கொண்ட வெறியின் பொருட்டு தன் கைகொண்டு கொன்று குவித்த மனிதர்கள், உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள்... குற்ற உணர்வு அவனை வாட்டுகின்றது. அந்நேரம் சிவன் வருகின்றார். "குருவினுக்காய் குருபரனை தேரில் கட்டிக் கொடுத்தவனோ, குரு குலத்தில் பிறந்த நீயோ, அருமை பெறு ஏகலைவன் விரலை வாங்கும் ஆண்பிள்ளையோ? காண்டவத்தை எரித்தனையோ?" "தெந்திரித் திரிதிரி தில்லானா தெந்திரித் திரிதிரி தில்லானா" அதிலிருந்து காட்சி ப்ளாஷ் பேக்குக்குச் செல்கின்றது! பாண்டவர்களால் ஆடம்பரமாகக் கட்டியெழுப்பப்பட்ட இந்திரப்பிரஸ்தம்! இந்த இந்திரப்பிரஸ்தத்தைக் கட்டுவதற்காக அர்ச்சுனனால் தீயிட்டு எரிக்கப்படுகின்றது காண்டவம் எனும் காடு. அங்கு வாழ் உயிரினங்கள் அல்லோலகல்லோலப்படுகின்றன. திக்குத் தெரியாது சிதறி ஓடுகின்றன. இறுதியில் இறக்கின்றன. இந்திரப்பிரஸ்தம் பாண்டவர்களால் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்படுகின்றது. கௌரவர்களை அழைத்து, அவர்களுக்குக் காட்டிப் பெருமிதம் கொள்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தின் பிரமாண்டம், அழகு, அற்புதம் என்பன கண்டு துரியோதனன் பொறாமை கொள்கிறான். பதிலுக்குத் துரியோதனன் தலைமையில் கௌரவர்கள் ஒரு மாளிகையைக் கட்டுகின்றனர். பாண்டவர்களை வஞ்சகமாக அழைத்து சூது விளையாடுகிறார்கள். "உருண்டன, உருண்டன காய்கள்..." ஆனால், பாண்டவர்களுக்கு தோல்விக்கு மேல் தோல்வி! அனைத்தையும் இழந்தனர்! இறுதியாக திரௌபதி பணயமாக்கப்படுகின்றாள்! தோற்கின்றனர்! திரௌபதி அழைக்கப்பட்டு யாவர் முன்னிலையிலும் துகில் உரியப்படுகிறாள். இதன் விளைவு – போர்! மகாபாரதப் போர்! ஆயுதங்களும் போர்க் கருவிகளும் விளையாடுகின்றன. அஸ்திரங்கள் பறக்கின்றன. அடுத்து வரும் பாடலும் ஆட்டமும், உலகப் போருக்கான மூலத்தைத் தொட்டு காட்டுகின்றது. கைத்தொழில் மயமாக்கம், தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்சசி! காடுகள் அழிக்கப்படுகின்றன. இயற்கை வளங்கள் சின்னாபின்னமாக்கப்படுகின்றன. முதலாளித்துவம் வலுப்பெறுகின்றது. கட்டடங்கள், தொழிற்சாலைகள் எழுகின்றன. பேராசை, ஆக்கிரமிப்பு, வல்லரசுகளுக்கிடையிலான போட்டி... இன்னொரு உலகப் போர் மூழ்கின்றது. எங்கு திரும்பிடினும் படைகளும் ஆயுதங்களும்! இயந்திரப் துப்பாக்கிகள், பீரங்கிகள், அணு ஆயுதங்கள்.... அர்ச்சுனன் தலை கவிழ்ந்து நிற்பது போல், விஞ்ஞானிகளும், ஜீனியசுகளும் தலைகுனிந்து நிற்கின்றனர். இதுதான் பேராசிரியர் மௌனகுரு அவர்களின் நெறியாளுகையில் உருவாகி வரும் புதிய கூத்து நாடகம். "காண்டவ தகனம்!" எனக்கு இந் நாடகம் பற்றி பிடிச்ச முதல் விடயம் அந்த "ஐடியா" – எண்ணக்கரு! "மகாபாரதப் போருக்கான மூலகாரணமாக, காண்டவ தகனம் (காண்டவம் எனும் காடு அழிக்கப்படுவது) இருந்ததை உவமானமாகக் கொண்டு இயற்கை வளங்கள் மீதான சுரண்டல் எவ்வாறு இன்னொரு உலகப் போருக்கான காரணமாக அமையப் போகின்றது என்பதை கூத்து வடிவில் எடுத்துச் சொல்லல்." சமகாலப் பிரச்சினையை தொன்மத்துடன் இணைப்பாக்கம் செய்து காட்டும் அந்த ஐடியா எனக்குப் பிடித்திருக்கின்றது. காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்களுக்கு ஒரு அசாதாரண சக்தி உண்டு. அது எதனால் என்பது எனக்குத் தெரியாது. நான் இப்படி நினைப்பது ஒருவேளை மூடநம்பிக்கையாக இருக்கலாம் அல்லது பகுத்தறிவுத்தனம் இல்லாத சிந்தனையாக இருக்கலாம். ஆனால் உண்மை! அந்த அசாதாரண சக்தி அல்லது கவர்ச்சி இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த அசாதாரண சக்தியை எவ்வாறு முற்போக்காக்கிக் கொள்வது? மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி எப்படி பகுத்தறிவை ஊட்டுவது? வினோதங்கள் ஊடாக எவ்வாறு யதார்தத்தைப் புரிய வைப்பது? ஒரு பக்குவப்பட்ட கலைஞன், சமூகம் பற்றிய ஆழ்ந்த புரிதலும், அக்கறையும் உள்ள ஒரு கலைஞனால் மட்டுமே இதனைச் செவ்வனே செய்ய முடியும். "காண்டவ தகனம்" நாடகத்தில் நான் இவற்றைக் கண்டேன். எனக்கு இந்த நாடகத்தில் பிடித்த வேறு விடயங்கள்... பாடல் வரிகளும், இசையும், குரலும், அந்தக் கோரசும்! லோக்கல் பாசையில் சொல்வதாயின், "சான்சே இல்லை!" பார்ப்பவரை குருஷேத்திரத்துக்கே அழைத்துச் செல்கின்றது! பரதத்தின் மென்மையும், கூத்தின் வன்மையும் கலந்த நடன அசைவுகள், தாளக்கட்டுகள், பாவங்கள்! எல்லாவற்றையம் விட எனக்கு இதில் அதிகம் பிடித்த விடயம் பேராசிரியர் மௌனகுரு அவர்கள் இந் நாடகத்தை வளர்த்தெடுக்கும் முறைமை. உண்மையில் இந்நாடகம் இன்னமும் பூரணத்துவம் பெறவில்லை. ஆனால் அதன் வளர்ச்சிக் கட்டநிலையிலே பேராசிரியர் அவர்கள் இதனை தனக்கு அறிந்த பல்வேறு சமூகக் குழுமங்கள், பார்வையாளர்கள் மத்தியில் மேடையேற்றுகின்றார். பார்ப்போருடன் உடனடியாகவும் அதற்குப் பின்னரும் அது பற்றித் உரையாடுகின்றார். அவர்களின் கருத்துகளை அறிகிறார். சிலரிடம் போன் பண்ணியே பேசவும் செய்கின்றார். நான் இரண்டு மேடைகளில் இந் நாடகத்தைப் பார்த்துவிட்டேன் - நான்கு நாட்கள் இடைவெளியில். ஆனால் முதலாவது ஆற்றுகையை விட இரண்டாவது ஆற்றுகையில் நான் பாரிய வளர்ச்சியைக் கண்டேன். பேராசிரியர் தனக்கென ஒரு கலைச் சசமூகத்தை உருவாக்குகின்றர். தன் பார்ப்போரை அந்நியப்படுத்தாமல் தன் நாடக வளர்ச்சியின் பங்காளிகள் ஆக்குகின்றார். அவர் குறைகளை மறைப்பதற்குப் பதிலாக அவற்றை வெளிக்கொணர்ந்து சரி செய்ய முயல்கிறார். ஆற்றுகை செய்யும் கலைஞர் பார்ப்போரின் கருத்துகளை நேரடியாகக் கேட்டறிந்து தன்னை செம்மைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றார். இந்த Social Oriented Theatre Work எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இது எமக்கும் வழி காட்டுவதாக உள்ளது.

 புதியவைகளால் நிறையட்டும் பூமி - அ.பாய்வா

திருமூலரின் திருமந்திரத்தைப்போல், குறியீடுகள், பூடகமான சிந்தனைகள், சங்கேதப்பாஷைகளெனநிறைந்தஅரங்குநிகழ்வு. தொலையுணர்வோடு கலைஞர்கள்வார்க்கப்படும் விதமும், அவர்களின்ஆட்டவேகமும் அவதானிப்புக்குரியன. அதீத கற்பனாவாதி-romantist-,பண்பாடுகளை உடைத்தெறியும்கலகக்காரர்-rebel-போல் சிலருக்குப்பேராசிரியர் தோற்றங்கொண்டலும் ,அவரொரு யதாரத்தவாதி -realist-என்பது நிரூபணம். இந்த மண்ணில் காலூன்றிநின்றுவிண்ணைக் காணவிழைபவர் அவர் ஆன்மீகமும்இந்தஅரங்கினூடாகப்புலப்படுவதாயுணர்கிறேன். புதியவைகளால் நிறையட்டும் பூமி. எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை.அதனால் வாழ்த்தவில்லை


பேரா. மௌனகுரு ஐயா ஒரு வித்தியாசக்காரர்.- 

காண்டவதகனம் கூத்து, பரதம் தழுவிய நாடகம். -
 நிந்தவூர்-முர்சித்(இலக்கியன்)

 பேரா. மௌனகுரு ஐயா அவர்களின் முயற்சியினால் 2009 இல் நிறுவப்பட்ட அரங்க ஆய்வுகூடமானது புதிய சிந்தனைகள் ஊடாக இளம் தலைமுறையினருக்கு கலைசார் படைப்பாற்றல் பயிற்சிகளை அளித்து வருகின்றது. அரங்க ஆற்றுகையில் புதிய, புதிய பயிற்சிகளை மேற்கொள்ள, சுதந்திரமான ஒரு மனவெளியையும் படைப்பின் திறன்களையும் அளிப்பதே ஆய்வுகூடத்தின் நோக்கமாகக் கூறப்படுகிறது. பல விதமான பயிற்சிப்பட்டறைகளை வாரம்தோறும் நடாத்தி வருகின்ற அரங்க ஆய்வுகூடமானது இதுவரை 15க்கும் மேற்பட்ட பரிசோதனை ஆற்றுகைகளை நிகழ்த்தியிருக்கின்றதாம். அந்தவகையில் கடந்த 22-23.08.2015 (சனி,ஞாயிறு) தினங்களில் சத்துருக்கொண்டானின் சர்வோதய மண்டபத்தில் நடைபெற்ற 45வது இலக்கியச்சந்திப்பில் பேரா. மௌனகுரு ஐயாவின் நெறியாள்கையில் 'காண்டவதகனம்'-கூத்து, பரதம் தழுவிய நிருத்திய நாடகம் ஆற்றப்பட்டது. 'காடழிப்பினால் அன்று பாரதப்போர் - காடழிப்பினால் இன்று உலகப்போர்' எனும் தொனிப்பொருளில் அமைந்த கூத்து நாடகமானது பேரா.மௌனகுருவை ஒரு கூத்துக்கலை விஞ்ஞானி என்றே சொல்லத்தூண்டியது. குறிப்பாக பிரதான பாடகியான சுகிர்தா வின் குரலும், பாடும் தன்மையும் மெய் சிலிக்க வைத்ததுடன் மேடையில் சசிகரன், பிரதாணி, சகிதா, ஞானசேகரன், ஜெனி, தினேஸ், நிகாந்தினி மற்றும் கேதீஸ்வரன் ஆகியோரின் நிகழ்த்துகைகள் முடியும்வரை இமைகளை மூடவிடாமல் மனதை ஆட்கொண்டது. துணைப்பாடகர்களான கிருஸ்ணவேணி, லாவண்யா, லோகதர்சினி மற்றும் ஜனனி அகியோரது பங்கு காற்றை சந்தமாக்கி வெளியை அர்த்தம் செய்தது. சரஸ்வதி அம்மாவின் வயலினும், யூட் நிராசனின் ஆர்மோனியமும இன்னும் இன்னும் பார்வையாளர்களது காதுகளில் இனிமை பாய்ச்சிக் கொண்டிருந்தது. மோகனதாசனின் தபேலா, மத்தளமும் மட்டுமல்லாமல் அவரின் குரலும் அரங்கை இன்னுமொரு தளத்திற்கு இட்டுச்சென்றது. இத்தனையையும் நெறிப்படுத்தியது மட்டுமல்லாமல் உடுக்கை மற்றும் தாளங்களோடு வாத்தியக் கலைஞர்களோடு அமர்ந்து சிறப்பித்தமை பேரா. மௌனகுரு ஐயா ஒரு வித்தியாசக்காரர் என்பதை மேன்மேலும் உறுதி செய்து கொண்டிருந்தது. அழிந்து வரும் கூத்துக்கலைகள் மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் மற்றும் தேடலையும் எப்படி இளையோர் மத்தியில் விதைப்பது என்பதை பேரா. மௌனகுரு ஐயா அவர்கள் நன்கு உணர்ந்து செயற்படுவது குறிப்பித்தக்கது. இது போன்ற காத்திரமான பணிகள் மட்டக்களப்புடன் மட்டும் மட்டுப்படுத்திவிடாமல், மட்டக்களப்பிமை மையப்படுத்தியதாக முழுத்தீவலாவிய ரிதியில் கொண்டுசெல்லும் ஆற்றல் பேரா. மௌனகுரு ஐயா அவர்களுக்கு இருப்பதை உணர முடிகிறது. இப்பணி மேலும் விரிவாக்கம் பெற அவரது மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து கலை, இலக்கிய செயற்காட்டாளர்கள், ஆர்வலர்கள், மற்றும் சமூக சிந்தனையாளர்கள் துணைநிற்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமில்லை. ______________________________________________________ கூத்து முடிந்ததும் போர் ஓய்ந்தது போல் இருந்தது ________________________________________________________ அ.பாய்வா- மட்டக்களப்பில் இடம்பெற்றஇந்நிகழ்வு (48 ஆவது இலக்கியச்சந்திப்புக் கருத்தரங்கு) ஒரு சொதப்பல்.இந்நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தங்களுக்குச் சார்பானவர்களாய்ப்பார்த்து அளிக்கைகளுக்குத்தேர்ந்தெடுத்ததும், ஈழத்தின் இலக்கிய உச்சங்களாகத் தங்களைக்கற்பனை செய்துகொண்டிருக்கும் சிலர் இதில் கலந்துகொள்ளாததும்கவனிக்கத்தக்கது. சொல்லப்பட்டஒருசில நல்ல கருத்துக்களையும்ஒலிவாங்கி விழுங்கிவிட்டது. ஆறுதலான ஒரேயொரு விடயம், பேராசிரியர் மௌனகுருவின் அளிக்கை. ஒரேவரியில்சொல்வதானால்,கூத்துமுடிந்ததும் போரோய்ந்ததுபோலிருந்தது .பின்பாட்டாயமைந்த செல்வி.சுகிர்தா அவர்களின் குரலிலிருந்தஅசாத்திய பலத்தை மறக்கமுடியாதிருக்கிறது.உணர்வுபூர்வமானபிர்காக்களை, இடமறிந்து அவர் பிரயோகித்தவிதம் அவதானிப்புக்குரியது.கூத்தின் வெற்றியில்அவரது பங்கு காத்திரமானது மொத்தத்தில்அதனைவெறுங்கூத்தாகவல்ல,ஆளுமைமிக்கஒருபுதியதலைமுறையின்எழுச்சியாகவே காண்கிறேன். உண்மை. வெறும் புகழ்ச்சியல்ல. -பாய்வா பொய்யுரையான்- _______________________________________________ ஆறு ஆற்றுகைகளிலும் சில காட்சிகள் 1ஆம் 2ஆம் ஆற்றுகைகள் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக கலா மண்டபத்தில் இடம் பெற்றது. 3ஆம் ஆற்றுகை மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் இடம் பெற்றது 4ஆம் ஆற்றுகை உவா வெல்லச பல்கலைக் கழக தமிழ் விழாவுக்காக வதுளை மாநகரசபை மண்டபத்தில் நடை பெற்றது 5ஆம் ஆற்றுகை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை மண்டபத்தில் நடை பெற்றது 6ஆம் ஆற்றுகை கண்ணகி விழாவை முன்னிட்டு வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் இடம் பெற்றது 7ஆம் அற்றுகை 48ஆவது இலக்கியச் சந்திப்பில் மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் சர்வோதய மண்டபத்தில் இடம் பெற்றது ஏனைய படங்களில் எங்கள் இசைகுழுவும் நடிகர்களும்

-மௌனகுரு-

Comments

Popular posts from this blog

தமிழ் 'இன்னிய' அணி

தமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்..

கூத்தரங்கம்