இசைப்பார் இல்லாத இராகம்!
இசைப்பார் இல்லாத இராகம்! அமரர் சுந்தரலிங்கம் அமரர் நா.சுந்தரலிங்கம் அவர்களின் நினைவுரை நிகழ்வு 21-03-2005 அன்று நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற போது பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் ஆற்றிய உரை. அரங்கியல் மாணவர்களின் தேவை கருதி இங்கே பிரசுரிக்கிறோம். இப்போது இந்த தலைமுறையைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் இங்கு வரவேண்டிய சந்தர்ப்பம் வந்தபோது நண்பர் தேவானந் அவர்கள் தொடர்பு கொண்டார். இப்பிடி ஒரு கூட்டத்தை நிகழ்த்தலாம் என அவர் கேட்டுக் கொண்டார். நான் அவருக்கு கொடுத்த தலைப்பு ‘இசைப்பார் இல்லாத இராகம்’ இசைப்பார் இல்லாத படியால் அந்த இராகம் இல்லாமலா போய்விடும். என்.சுந்தரலிங்கம் ஒரு மிகப் பெரிய அற்புதமான இராகம். ஆனால் இசைப்பார் இல்லாத இராகம். அவர் மரபை, தன்மையை, துறையை ஏற்றுக் கொண்டு போகின்ற ஒரு தலைமுறை உருவாகவில்லை, உருவாக வழிகோலவில்லை என்பதனால் தான் நான் அவரை பற்றி இசைப்பார் இல்லாத இராகம் என்கிற தலையங்கத்தில் பேசலாம் என்று நினைக்கிறேன். அவர் மறைந்துவிட்டார். அவர் எங்களிடம் விட்டுச் சென்ற எழுத்துக்கள்தான் மிஞ்சியிருக்கின்றன. எழுத்தாளர் இறந்து விட்டால் படைப்புக்கள்தான் மிஞ்சி உள...